நியூஜெர்ஸியில் தொடங்கியது 2016 ஃபெட்னா தமிழ் விழா: நடிகர் அரவிந்த்சாமி பங்கேற்பு - Cine Cafe

Cine Cafe

The Full of Entertainment

Sunday, 3 July 2016

நியூஜெர்ஸியில் தொடங்கியது 2016 ஃபெட்னா தமிழ் விழா: நடிகர் அரவிந்த்சாமி பங்கேற்பு




ட்ரென்டன்(யு.எஸ்): வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் (FeTNA)2016 ஆம் ஆண்டு தமிழ் விழா, நியூஜெர்ஸி மாநிலம் ட்ரென்டன் நகரில் இன்று தொடங்கியது. வரும் ஜூலை 4-ம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. தனித் தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டமாக இந்த ஆண்டு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


அரவிந்த் சாமியும் விஜய் பிரகாஷும் முதல் நாள் நிகழ்வாக நன்கொடையாளர்கள் சிறப்பு விருந்துடன் விழா ஆரம்பமாகி உள்ளது. நடிகர் அரவிந்த் சாமி, 'தமிழிசை' டிஎம்கிருஷ்ணா, சித்த மருத்துவர் சிவராமன், பேராசிரியர் ராமசாமி, பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், தமிழ் மரபு அறக்கட்டளை டாக்டர் சுபாஷிணி, சங்க இலக்கிய ஆங்கில மொழிபெயர்ப்பாளர் வைதேகி ஹெர்பர்ட், பாடகர் விஜய்பிரகாஷ், ஆகியோர் கலந்து கொண்டனர். பேரவைத் தலைவர் நாஞ்சில் பீட்டர், விழா ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பழனிசாமி சுந்தரம், நியூஜெர்ஸி தமிழ்ச் சங்கத் தலைவர் உஷா கிருஷ்ணகுமார் ஆகியோர் விழாவுக்கு அனைவரையும் வரவேற்றனர். நன்கொடையாளர்களின் கூட்டத்தால் அரங்கம் நிரம்பி வழிந்தது 


தமிழ் தொழில் முனைவோர் கூட்டம் சனிக் கிழமை விழா தமிழ் மறை ஓதுதல் நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அன்று முழுவதும் தமிழ் தொழில்முனைவோர் கூட்டம் இணை அமர்வில் நடைபெற உள்ளது. இதில் அரவிந்த்சாமி, தொழில்முனைவோராக கலந்து கொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்க நிறுவனங்களில் CEO, CIO என உயர்பதவிகளில் பணியாற்றும் பல்வேறு தமிழர்கள் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தங்கள் ஐடியாக்களை முதலீட்டார்கள் முன்னிலையில் சமர்ப்பித்து, தேர்ந்தெடுக்கப்படும் புதிய முயற்சிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கங்கை கொண்ட சோழன் முக்கிய அரங்கத்தில் சிறப்பு விருந்தினர்களின் நிகழ்ச்சிகளுடன், பல்வேறு இணை அமர்வு நிகழ்ச்சிகளும் நாள் முழுவதும் நடைபெற உள்ளது. மருத்துவர்களுக்கான தொடர் கல்விக்கான முகாம், இலக்கிய வினாடி வினா, தமிழ்ச் சங்கங்களின் கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் தேனீ, தமிழ்த்தேனி, கவியரஙகம், இலக்கிய சொற்பொழிவு என சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் திருவிழா போல் தொடர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை நேர சிறப்பு நிகழ்ச்சிகளாக கங்கை கொண்ட சோழன் நாடகமும், விஜய் பிரகாஷ், ஜெசிக்கா ஜூட், ஹரிப்ரியா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது.

கனடா எம்.பி கரி அனந்த சங்கரி மற்றும், அமெரிக்க காங்கிரஸ் சபை தேர்தல் வேட்பாளார் ராஜா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்ற உள்ளார்கள். மூன்றாவது ஆண்டாக ஃபெட்னா குறும்படப் போட்டியும் தமிழ் விழாவின் அங்கமாக நடைபெற உள்ளது. வட அமெரிக்கா முழுவதிலிருந்தும் தமிழர்கள் நியூஜெர்ஸி ட்ரென்டன் நகரில் குழுமியுள்ளனர். விழா நடைபெறும் பகுதியில் எங்கு திரும்பினாலும் தமிழ்க் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment