சென்னை: வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரில் ராம் கோபால் எடுத்துள்ள படத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் பொய். அந்தப் படத்தைப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி. இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது கணவர் வீரப்பன் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க திரைப்படம் எடுத்து வருகின்றனர்.
முன்னாள் போலீஸ் அதிகாரி தேவாரம் பல ஆண்டுகளாக என் கணவரை தேடியுள்ளார். அவர்கள் புத்தகம் எழுதினால் அர்த்தம் உண்டு. ஆனால் விஜயகுமாருக்கு என்ன தெரியும்? எனது கணவரை மோரில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். இந்த உண்மையை அவர் சொல்ல தயாரா ? விஜயகுமார் தவறான தகவல் கொடுத்து வருகிறார். யாரும் செய்யாத தவறை எனது கணவர் செய்யவில்லை. என் கணவர் சந்தன மரம் கடத்திய காலங்களில் நான் அவருடன்தான் இருந்தேன். நாங்கள் தலைமைறைவாக வாழ்ந்த காரணம் என்ன போன்ற பல விஷயங்கள் விரைவில் வெளிவரும். அவருக்கு இது போன்ற சூழல் ஏற்பட காரணம் என்ன என்பதையும் விரைவில் சொல்வேன்.
இந்தப் படத்தில் என் கணவர் பிரபாகரனைப் பார்க்கப் போனபோது கொன்றதாகக் காட்டியுள்ளனர். பிரபாகரனுக்கும் எனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்தப் படத்தை எடுக்கும் முன்பு ராம் கோபால் வர்மா என்னிடம் சொன்னது ஒன்று... இப்போது அவர் எடுத்திருப்பது வேறு. என் கணவருடைய வாழ்க்கைக் கதைக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்லை.. அதனால்தான் இந்தப் படமும் பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்கு. இந்த திரைப்படத்தை யாரும் பார்க்க வேண்டாம்," என்றார்.
No comments:
Post a Comment